R Venkataramanan

R Venkataramanan

R Venkat's Blog

R Venkat's Blog
"To be an Inspiring Teacher,one should be a Disciplined Student throughout Life" - Venkataramanan Ramasethu

SNK

SNK

Sunday, December 8, 2013

காதலை விஞ்ச உண்மையிலேயே வேறு பாடல்கள் தோன்றவில்லை


பாரதியின் கண்ணன் பாட்டின்் காதலை விஞ்ச உண்மையிலேயே வேறு பாடல்கள் தோன்றவில்லை. கண்ணன் பாடல்கள் அனைத்தும் இசைவாணர்களால் பாடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. தாளக்கட்டிற்கும், ராக நயத்திற்கும் இசைகின்ற வகையில் அமைந்துள்ளன. இந்த உணர்வுகளைப் பிழிந்தெடுத்து பாரதி தன் குரலிலேயே பாடியபொழுது, நேரடியாகக் கேட்டவர்கள் பாக்கியவான்கள் என்கிறார் வ.வே.சு. ஐயர். இப்பாடல்களின் இனிமையைச் சொல்லால் சொல்லிவிட முடியுமா? கண்ணன் பாட்டுதான் பாரதியின் பாடல்களில் சிரோண்மணி என்கிறார் சுத்தானந்த பாரதி. கண்ணன் பாட்டைப் பொறுத்தவரை ராக தாளங்கள் வாய் பொத்தி தலையசைத்து நின்றன. ஒவ்வொரு பாட்டுக்கும் பாரதி தேர்ந்தெடுத்த ராகம் அந்தப் படலின் உணர்வோடு பொருந்தியது.

கண்ணன் என் தோழன் என்ற பாடலைப் புன்னாகவராளியில் அமைத்து திஸ்ரகதி ஏக தாளத்தைக் கொடுத்திருக்கிறார். இந்த ராகத்தின் குணம் சோகச் சுவையையோ அல்லது கருணையையோ வெளிப்படுத்தும். இப்பாடலில் தோழனிடம் இரந்து கேட்கின்றான் பாரதி. `கேட்டபொழுதினில் பொருள் கொடுப்பான் ’ என்ற இடத்தில் இப்படியொரு நண்பன் தனக்குக் கிடைக்கமாட்டானா என்ற ஏக்கமும், கிடைத்துவிட்டால் அத்தோழனோ கருணை கொண்டு `ஆறுதல் செய்திடுவான்’. எளிமையான தாளக் குறிப்பில் அமைக்கப்பட்டதற்குக் காரணமே தான் விரும்புவனவற்றைக் கண்ணன் தோழனாக இருந்து தர வேண்டும். அப்படி கேட்கப் புகும்பொழுது, தாள நெருடல் இருக்கக் கூடாது என்பதாலேயே இத்தகைய எளிய தாளக் குறிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளான்.

கண்ணனைத் தாய், தந்தையாகக் கொண்ட இடத்தில் நொண்டிச் சிந்து மெட்டில் அமைக்கிறார். இசை நுணுக்கம் தெரியாதவர்கள் கூட கண்ணனைத் தாயாகவும், தந்தையாகவும் கொள்ளும்பொழுது பாட்டிசைக்க இயல வேண்டும் என்ற எண்ணமே காரணமாக இருந்திருக்க வேண்டும். சேவகனுக்கு ராகக் குறிப்பே இல்லை. ஆமாம் சேவகனை என்ன பாட்டுப் பாடியா கூப்பிட முடியும்? பானையிலே தேளிருந்து பல்லால் கடித்தது என்று சொல்லி விடுப்புக்கு நம்ப முடியாத பொய் சொல்லும் சேவகனுக்கு என்ன ராகமும் தாளமும் வேண்டிக் கிடக்கு? சரி போகட்டும். சேவகனுக்குத்தான் ராகக் குறிப்பு இல்லையென்றால் அரசன் தொகுப்புக்கும் ராகக்குறிப்பு இல்லை. ஆமாம் அரசனைப் பார்ப்பதே கடினம். அப்படியே பார்த்துவிட்டாலும் அரை நொடியில் தகவலைச் சொல்லிவிட்டு காரியத்தைக் கைகொள்ள வேண்டும். இல்லையென்றால் என்ன இழுவை என்று கேட்கமாட்டானா மன்னன்?

`சக்கரத்தை எடுப்ப தொருகணம்; தருமம் பாரினில் தழைத்தல் மறுகணம்’ என்பதில் `எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்’ என்று ஒரு கணத்திலேயே வெற்றியின் உச்சம் காணும் வேகம். இதற்கு வீரச்சுவையை வெளிப்படுத்தக்கூடிய பிலஹரி, பேகடா, தேவகாந்தாரி ஆகியவற்றைக் கூடத் தவிர்த்துவிட்டார். இங்கு பாட ஏது நேரம்? சுருதி கூட்டுவதற்குள் வெற்றிக் கொடி நாட்டப்பட்டுவிட்டதே?

`கதையிலே கணவன் சொல்லினுக்கெல்லாம் எதிர் செய்யும் மனைவிபோல இவனும் நான் காட்டும் நெறியினுக்கெல்லாம் நேரெதிர் நெறியே நடப்பானாயினான்’. சொன்னபடி கேட்காமல் மக்கர் பண்ணும் சீடனிடம் வெறுப்பைக் காண்பிக்கும் வேளையில் வெறுப்புச் சுவையான பீபத்சம் என்ற வெறுப்பை வெளிப்படுத்தும் அடானாவைப் பயன்படுத்தியிருக்கலாம். வெறுப்பினில் பாரதியார் இப்பாடல்களுக்கு ராகமே போடவில்லையோ என்னவோ? இதற்கு ` என்மனம் வருந்த நடந்திடல் கண்டேன்’ என்று சாட்சியம் வேறு தருகிறார்.

சத்குருவிடம் நல்ல பயம் போலும் எனவே பயானகம் என்று சொல்லக்கூடிய பயச்சுவையை வெளிப்படுத்தும் புன்னாகவராளியில் திஸ்ர ஏக தாளத்தில்அமைத்திருக்கிறார். `அறிவான தனிச்சுவை நான் கண்டேன்,’ இதைத்தான் பயபக்தி என்கிறார்கள் போலும்.

அன்புச் சுவையான சிருங்காரத்தை வெளிப்படுத்துவது பைரவி. கண்ணம்மா என் குழந்தையில் ரூபக தாள மெட்டில் இந்த ராகத்தில் புனைந்துவிட்டார். `மார்பினில் அணிவதற்கே உன்னைப் போல் வைர மணிகளுண்டோ 'என்ற வரிகளில் பொங்கிக் கொட்டும் அன்பிற்கு பைரவியை விட வேறு எந்த ராகம் பொருந்திவிட முடியும்?

ஹாஸ்யத்தை அதாவது மகிழ்ச்சி சுவையை அளிக்கக்கூடியது கேதாரம். இந்த ராகத்தில் அமைந்ததுதான் `தீராத விளையாட்டுப் பிள்ளை,' கண்ட ஜாதி ஏக தாளத்தில் உள்ளது. இது போதுமே `தெருவில் அத்தனை பெண்களையும் ஆகாதடி’க்க.

கண்ணனைக் காதலனாகக் கண்டவுடன் சிருங்கார ரசம் பொங்குகிறது பாரதியின் மனதில். நெஞ்சை அள்ளிச்சுருட்டிவிடுமல்லவா செஞ்சுருட்டி. அதே ராகத்தைக் கொண்டு, ‘ எண்ணும் பொழுதெல்லாம் அவன் கை இட்டவிடத்தினிலே தண்ணென் றிருந்ததடி புதியதோர் சாந்தி பிறந்ததடி’ என்கிறார். ஆனால் இந்த வரிகளைப் படிக்கும்பொழுது, ராகமெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், காதலனை அனுபவிக்கும் பொழுது ராகமாவது ஒன்றாவது.

நம் கிறக்கம் நீங்குவதற்குள் உறக்கமும், விழிப்புமாக நாதநாமக்கிரியையில் விருப்பையும், வெறுப்பையும் சேர்த்துக் கட்டுகிறார். கண்ணனைக் கையிரண்டுங் கட்டவில்லையென்றால் வெறுப்பாகவும், கட்டிவிட்டால் விருப்பாகவும் அமைந்துவிடுகிறது. நாதநாமக்கிரியை இங்கு படு பொருத்தம். பின்னர் இதே கண்ணனை,` திக்குத் தெரியாத காட்டினிலே’ தேடுகிறார் ஹிந்துஸ்தானி தோடியில். பயமாகவும் இருக்கிறது; இச்சுவை அவருக்கு வியப்பாகவும் இருக்கிறது. `கண்ணன் மனநிலையை’ என்ற இடத்தில் சிருங்கார சுவை சொரியப் பாடுகின்ற இவர், இதே பாட்டில் ` தயை மறந்து திரிபவர்களுக்கு மானமுண்டோ?’ என்று சீறிப் பாய்கிறார். கோபத்தைக்காட்ட ஆரபி.

`ஆசை முகமறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி!’ என்று பிலஹரியில் பிரிவற்றாமையில் புலம்புகிறார். சிருங்கார ரஸம் கொட்டும் வராளியில் கண்ணன் கவர்ந்து இழுக்கும் காந்தனாகிவிடுகிறான். கண்ணனை ஆண்பாலாகவே கண்டு வந்த பாரதியாருக்கு, காதலியாக, கண்ணம்மாவாகக் கண்டவுடன் அக்காட்சியே மிகுந்த வியப்பை அளிக்கிறது. சிருங்காரத்தையும் அற்புதத்தையும் குழைத்து செஞ்சுருட்டியில், `சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா’ என்று உருகுகிறார். ` முத்தமிட்டெ தழுவி முகிழ்தல் கண்டேன்’ என்பது பெரும் சிருங்காரம். வாய்க்குள் பெரிய கற்கண்டை அதக்கி சிறிது சிறிதாக ஊற ஊற விழுங்குதல் போன்றதொரு அன்புச் சுவை. கண்ணம்மாவை கொஞ்சிக் கொஞ்சி கவி பேசும் பாரதி `கனி கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பானோ’ என்பதை ராகம் நாதநாமக்கிரியைவிட மேன்மையாக எந்த ராகத்தால் அமைத்துவிட முடியும்?

கண்ணம்மாவிடம் கொஞ்சிக் குலவும் பாரதி,`தீர்த்தக் கரையினிலே’ பாடல் மூலம் சிருங்கார ரஸம் நிரம்பிய செஞ்சுருட்டி ராகத்திடம் தஞ்சமடைந்துவிட்டார்.

குழந்தையாகக் கண்ணனைக் கண்டு படிப்படியாக பல நிலைகளில் அவனை ரசித்து, இறுதியாக ஆண்டானாகக் கண்டு நிறைவுறுகிறான். அற்புதத்தையும் கருணை யையும் வெளிப்படுத்தும் புன்னாகவராளியில் `நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா’ என்று சொல்லிக் காதலிக்குள் அடங்கிவிட்டான் கவிஞன்.