R Venkataramanan

R Venkataramanan

R Venkat's Blog

R Venkat's Blog
"To be an Inspiring Teacher,one should be a Disciplined Student throughout Life" - Venkataramanan Ramasethu

SNK

SNK

Tuesday, November 5, 2013

‘சோழநாடு மீண்டும் சோறுடைத்து’ என்ற வார்த்தை உயிர்பெறும்!


கடந்த ஜூலை வரை கால்நடைகளின் தாகம் தணிக்கத் தண்ணீர் இல்லை. ஆனால், நம்மிடம் தண்ணீரைத் தேக்கி வைக்க வசதிகள் இல்லாததால் ஆகஸ்ட் ஆரம்பத்தில் 30 டி.எம்.சி. தண்ணீர் முழுவதுமாக கொள்ளிடம் வழியே கடல் கொள்ளைப்போனது. மேட்டூரே நிரம்பிவிட்ட நிலையில், வேறு எப்படித்தான் தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்று சிலர் கேட்கலாம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே கதவணைகள் கட்டலாமே. அதைத்தானே காலம் காலமாக விவசாயிகளும் விவரம் அறிந்தவர்களும் வலியுறுத்துகிறார்கள்.

தமிழக டெல்டா பகுதி. எங்கு திரும்பினாலும் பச்சை வயல் பரப்பு. அதன் ஊடாக பாம்பென நெளிந்து செல்லும் வாய்க்கால்கள். வயலில் மாடு கால் வைத்தால் நிலத்தடி நீர் ஊறி குளம்பை நிறைக்கும். நிற்க, இவை எல்லாம் இப்போது அல்ல; அது ஓர் அழகிய காவிரி கனாக்காலம்.
இன்று..? ஆடு கட்டி போர் அடிக்கக்கூட அங்கு விளைச்சல் இல்லை. சொந்த நெல்லை சோறாக்கி உண்ட விவசாயி சோறில்லா மல் வெந்து சாகிறான். கர்நாடகாவிடம் காவிரி சிறைபட்டதால் மூன்று போகம் ஒரு போகமாகிவிட்டது. ஒருபக்கம்கடும் வறட்சி மறுபக்கம் புயல் மழை என பருவ நிலை தலைகீழாகி விவசாயிகளைப் பாடாய்ப்படுத்துகிறது.

திருச்சிக்கு கிழக்கே உள்ள பகுதிகள், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி - இவைகளே காவிரி டெல்டா. கடந்த ஜூலை வரை கால்நடைகளின் தாகம் தணிக்கத் தண்ணீர் இல்லை. ஆனால், நம்மிடம் தண்ணீரைத் தேக்கி வைக்க வசதிகள் இல்லாததால் ஆகஸ்ட் ஆரம்பத்தில் 30 டி.எம்.சி. தண்ணீர் முழுவதுமாக கொள்ளிடம் வழியே கடல் கொள்ளைப்போனது. மேட்டூரே நிரம்பிவிட்ட நிலையில், வேறு எப்படித்தான் தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்று சிலர் கேட்கலாம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே கதவணைகள் கட்டலாமே. அதைத்தானே காலம் காலமாக விவசாயிகளும் விவரம் அறிந்தவர்களும் வலியுறுத்துகிறார்கள்.

காவிரி பாசனப் பகுதிகளில் மேற்பார்வை பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரான நடராஜன் முன் வைக்கும் திட்டங்கள் பயன் மிக்கவை. ''டெல்டா பகுதியில் பணிபுரிந்தபோது காவிரியில் மேட்டூருக்கு கீழே மாயனூர் வரை 13 இடங்களில் நேரடியாக ஆய்வு செய்து, அங்கெல்லாம் 20 அடி உயர கதவணைகள் கட்டலாம்; அவைகள் மூலம் 15 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கலாம் என அரசுக்கு அறிக்கை கொடுத்தோம். ஆனால், செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக் கோட்டை, அக்ரஹாரம், சமயசங்கிலி, பாசூர், மாயனூர் ஆகிய எட்டு இடங்களில் 10 அடி உயரத்தில் மட்டுமே கதவணைகள் கட்டப்பட்டன. அதனால், எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீரைத் தேக்க முடியவில்லை.

ஆனால், இப்போது இருக்கும் நிலைக்கு நாங்கள் முன்பு குறிப்பிட்டதில் பாக்கி ஐந்து இடங்களில் மட்டும் கதவணைகள் கட்டினால் போதாது; மேலணை வரை மேலும் கூடுதலாக ஐந்து இடங்களில் கதவணைகள் கட்டப்பட வேண்டும். இப்படி காவிரி, கொள்ளிடம் ஆறு களில் கட்டப்படும் கதவணைகளால் மொத்தம் 30 டி.எம்.சி. வரை தண்ணீரை சேமிக்க முடியும்.

இதனால் நேரடி பலன் தண்ணீர் சேமிப்பு என்றால் மறைமுகப் பலன்கள் ஏராளம். ஆற்றின் இரு கரைக்கும் இணைப்புச் சாலைகள் கிடைக்கும். சுற்றுவட்டாரங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் ஆதாரம் பெருகும். மின்சாரம் உற்பத்திக்கும் வாய்ப்பு உண்டு'' என்கிறார் நடராஜன்.

கடந்த மாதம் கடலில் கலந்த 30 டி.எம்.சி தண்ணீரின் மதிப்பு மொத்த டெல்டாவின் ஒரு மாத பாசனத்துக்கானது. அது வீணாய்போனது. இப்படி ஆண்டுதோறும் உபரிநீர் என்று சொல்லி நூற்றுக்கணக்கான டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த 2005-ம் ஆண்டு மட்டும் 90 டி.எம்.சி. தண்ணீர் வீணாக்கப்பட்டது. அதற்கு பிறகான ஆண்டுகளில் 200 டி.எம்.சி தண்ணீர் வீணாக்கப்பட்டிருக்கிறது. இப்படி வீணாகும் நீரைச் சேமிக்க வேறு யோசனைகளையும் விவசாயிகள் முன்வைக்கிறார்கள்.

''பெரம்பலூர் மாவட்டத்தில் ஆற்றுப்பாச னம் கிடையாது. மழைக்காலத்தில் மட்டுமே ஆற்றில் தண்ணீர் இருக்கும். கதவணைகள் கட்டப்பட்டு பொன்னாற்றில் புதிய கால்வாய் தோண்டப்பட்டு அதில் கொள்ளிடத்து வெள்ளத்தை அரை மணி நேரம் திருப்பி விட்டால் போதும். பொன்னேரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி பெரம்பலூர் மாவட்டத்தின் பாசனம் அமோகமாகும். அதேபோல் மேற்கே லால்குடியில் இருந்து புள்ளம்பாடி வாய்க்காலை வீராணம் வரை நீட்டித்தால் 100 கி.மீட்டர் தூரம் வளம் பெறும்'' என்கிறார் வீராணம் பகுதி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த இளங்கீரன்.

தண்ணீரைத் தவிர்த்து விவசாயத்துக்கு ஏற்பட்டிருக்கும் வேறு பிரச்னைகளையும் தீர்வுகளையும் அடுக்குகிறார் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன். ''வேலை ஆட்கள் பற்றாக்குறை மிக அதிகம். எந்திரங்கள் இருந்தால்தான் இப்போது விவசாயம் செய்ய முடியும். ஆனால், எந்திரங்கள் விஷயத்தில் தனியார் அளவுக்கு அரசின் வேளாண் பொறியியல் துறை அக்கறை காட்டவில்லை. ஒன்றிய அளவில் நெல் நடவு எந்திரம், அறுவடை எந்திரம், கரும்பு அறுவடை எந்திரம் வாங்கப்பட வேண்டும். அது முதல் தேவை.அடுத்து, கரும்புக்கும் நெல்லுக்கும் உரிய விலை வேண்டும். அடுத்து, தூர்வாருதல். நபார்டு வங்கி தந்த் தொகை 5000 கோடியை வைத்து 12 ஆண்டுகளாக தூர்வாருவதாக சொல்கிறார்கள். ஆனால், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாய்க்கால்களில் தூர்வாறும் பணி நடக்கவே இல்லை. ஒரு வாய்க்காலை தூர்வாரினால் அதன் இரு கரையோரங்களையும் சிமெண்ட் பூச்சின் (ரிவிட்மென்ட்) மூலம் வலுப்படுத்த வேண்டும். அப்போதுதான் கரையோர மண் சரியாது. குளங்கள், குட்டைகளுக்கு இதே முறை பொருந்தும். இதனால், ஆக்கிரமிப்புகளும் தடுக்கப்படும். நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.

கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க ஓர் ஆண்டில் ஒரு போகத்துக்கு மட்டும் விவசாயிகள் 91 கோடி ரூபாயை லஞ்சமாக கொடுக்கிறார்கள் என்கிற அதிர்ச்சி உண்மை அரசுக்குத் தெரியுமா? 40 கிலோ கொண்ட ஒரு சிப்பத்துக்கு 30 ரூபாய் லஞ்சம். காசோலை முறையை கட்டாயமாக்கி, கண்காணிப்பையும் கடுமையாக்கினால் லஞ்சத்தை ஓரளவாவது தவிர்க்கலாம்.

தண்ணீர் பற்றாக்குறை உள்ள நேரத்தில் மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிக ளுக்கு உடனடியாக இணைப்பு வழங்கி, சிறு குறு விவசாயிகளுக்கு யூனிட்டுக்கு 3.50 என கட்டணம் வசூலிக்கலாம். ஏற்கனவே இருக்கும் 65 ஆயிரம் மின் இணைப்புகளுக்கு மின் வினியோகிக்கும் உபகரணங்களை புதுப்பிக்க வேண்டும்.தேசிய வங்கிகள் விவசாய கடனில் குறிப்பாக, நெல்லுக்கு கடன் தருவதில் அக்கறை காட்டுவது இல்லை. மாநில தொழில்நுட்பக் குழு பரிந்துரைந்துள்ள அளவுக்கு விவசாயிகளுக்கு தேசிய வங்கிகள் கடன் அளிக்க வேண்டும். தற்போதுள்ள பயிர் காப்பீடு திட்டத்தில் மாறுதல்கள் செய்து தனி நபர் காப்பீடாக ஆக்க வேண்டும். அப்படி செய்தால் தனிப்பட்ட சேதங்களுக்கும் காப்பீடு கிடைக்கும்'' என்றார்.

டெல்டாவுக்காக டெல்லி வரை மல்லுக்கட்டும் முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்னைகளையும் கரிசனத்தோடு கவனித்தால் ‘சோழநாடு மீண்டும் சோறுடைத்து’ என்ற வார்த்தை உயிர்பெறும்!